செவ்வாய், 6 செப்டம்பர், 2011

விதியின் குற்றமா?விபத்துக்கு காரணம் விதியென்று சொல்வது
வெகுநாளாய் வாடிக்கை!
பணியில் அவசரமும்
பாதுகாப்பை மறப்பதுவும்
விபத்தை தருமேயன்றி
விதியின் குற்றமன்று!

நீர் வற்றி போனதற்கு
ஆறுதான் குற்றமென்று
அவதூறாய் சொல்வதுபோல்
விதியால் தான் விபத்து என்று
விளம்புவது குற்றமன்றோ?
மண்ணுக்குள் கனிமம் தேடும் சுரங்கப்பணி
எண்ணிலடங்கா ஆபத்துக்கள் நிறைந்தபணி!
காப்பு விதி ஆயுதத்தை கையில் கொண்டு
போக்கிடலாம் விபத்தைஎல்லாம் நொடியில் கண்டு!

தலைகாக்க தலை கவசம்!
கால்களுக்கு காலணிகள் !
கண்களை காத்திடும் கண்ணாடி!
கூலி வாங்கா சேவகராய் -உன்
கூடவே இருந்துவரும் விரல் காக்கும் கையுறைகள் !
நித்தமும் இவை அணிந்து சுரங்கப்பணி தொடர்ந்திடவே
அக்கணமே விபத்து எல்லாம் காணமல் ஓடிவிடும்!

சுரங்கத்தில்
தெரியாத வேலையை
தெரிந்தது போல் செய்வார் எல்லாம்
ஆலையில் சிக்கிய கரும்பென
அவதியுறுவார் நிச்சயம்!
அதிகாரியின் அறிவுரையால் அவ்வேலை
முடிப்போருக்கு ஆபத்தில்லை நிச்சயம்!

எந்திரங்கள் தவறு செய்து எடுப்பதில்லை உன் உயிரை!
நீ செய்யும் சிறு தவறே எடுத்து விடும் உன் உயிரை!
சிறுதுளி பெருவெள்ளம் ஆவதுபோல்
சிறுதவறு பெருநட்டம் தந்துவிடும்!

காதல் மனைவியையும்,
கண்ணான குழந்தைகளையும்,
கணப்பொழுது நினைத்தாலே -பணியில்
கவனம் கூடிடுமே!
விபத்துக்கள் விலகி ஓடிடுமே!

யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும்
உன்னை யோசிக்க வைக்கும்!
யோசித்து நீ செய்யும் ஒவ்வொரு செயலும்
பிறரை யோசிக்க வைக்கும்!
தெளிவாய் சிந்தித்து பணி தொடங்கு சுரங்கத்தில் !
தேடி வரும் வெற்றிமாலை அரங்கத்தில்!
விதியை நம்பி வீழ்ந்து கிடக்காதே!
மதியை நம்பு மகுடங்கள் உனதாகும்!