சனி, 26 பிப்ரவரி, 2011

குறள் சிந்தனை!

குறள் சிந்தனை!

மூன்று தமிழ் அறிஞர்கள் சொல்லும் குரளுரைக்கு இது போட்டி இல்லை .என்
மனதில் தோன்றிய வித்தியாசமான சிந்தனை.....


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
:குறள்
கலைஞர் உரை:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மு.வ உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

எனது கருத்து :

எனக்கு அது வேண்டும் ! இது வேண்டும்! எவரிடமும் கை ஏந்தி நில்லாதவன்
இறைவன் .அந்த இறைவனின் திருவடியை சரணடைந்தால் எந்த துன்பமும் இல்லை!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

பிளாஸ்டிக் ஆபத்து.

பிளாஸ்டிக் ஆபத்து.

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயர்- 500-800 ஆண்டுகள்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்


சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்

*******************************

வனவளம் காத்து கனிம வளம் பெருக்குவோம்!

வானுயர்ந்த மேகங்கள் வா வென்று அழைத்தால்தான் சூல் கொண்ட மேகங்கள் சுற்றி நின்று மழை பொழியும்!

வீட்டை சுற்றி நாம் நட்டு வைத்த மரம் ;சுற்றி வரும் தூசிகளை தடுத்திடுமே நிதம்!

மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மண் அரிப்பு குறைந்து விடும்!

மரங்கள் இல்லாத பூமி! மனிதன் வாழ முடியாது சாமி!

இயற்கை மரங்களின் வழியாகத்தான் சுவாசிக்கிறது! மரங்கள் அழிந்திட இயற்கை அழிந்திடும்!

காற்றில் நஞ்சை கலக்காதே! கால தேவனை அழைக்காதே!

வனங்கள் ஒரு பூமியின் நெற்றி திலகம்! பூமியை விதவையாக்காதீர்!

பசுமை பூமியை விட்டு வெளியேறும் போது பஞ்சம் அங்கே மெல்ல நுழைகிறது!

வாருங்கள் ஓசோன் ஓட்டையை வானுயர்ந்த மரங்களால் அடைத்திடுவோம்!

பெற்ற அன்னை ஊட்டுவது பாசம்! இயற்கை அன்னை ஊட்டுவது சுவாசம்!

விண்ணோக்கி மரம் உயர்ந்து நிற்க ,மண் நோக்கி மழை பொழிவு உயரும்!

நல்ல மரங்களை கொன்றுதான் மோசமான செய்தி தாள்கள் வருகின்றன!

நாம் அனைவரும் சேர்ந்து சாகத்தொடங்கியிருக்கும் பூமிக்கு மரங்களால் உயிர்கொடுப்போம்!

மரங்களை அரவணைத்து நில்!அவைகள் நம்மை காப்பாற்றும்!

நமது பூமியை நாமே காப்போம்!

குழாய் நீர் கசிவை உடனே நிறுத்து! இல்லை எனில் ஆண்டுக்கு இருபதாயிரம் லிட்டர் தண்ணீர் விரயமாகும் !

காகிதத்தை சேமித்து காடுகளை காப்போம்!

பூமி தன்மேல் நிற்க உன்னை அனுமதிக்கிறது! நீ அது தன் நிலையிலிருந்து மாற அனுமதிக்காதே!

கடலும் வானும் நீலமாகவும்,பூமி பசுமையாகவும் இருக்கட்டும்!

இழை பல்புகளை தவிர்த்து குழல் விளக்குகளை பயன்படுத்தி மின் செலவை குறை!

இன்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், வரும் ஆயிரம் ஆண்டிற்கு துன்பம் தரும்!

மரங்களால் நீர்வளம் பெருகும்,நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.

புவி வெப்பம் உயர ,கடல்மட்டம் உயரும்! கடல்நீர் உயர கடற்கரை நகரங்கள் நீரில் முழுகும்!

புதன், 9 பிப்ரவரி, 2011

பசுமையை போற்றுவோம்!

பசுமையை போற்றுவோம்!

விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. "குளொபல் வார்மிங்"(Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என விஞ்ஞானிகள் பீதி கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப்பற்றிய எந்த கவலையும் விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான். குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசு படுத்துவதில் மனிதனுக்கு நிகர் யாரும் இல்லை.

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் இடையறாது உமிழப்பட்டுக்கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடுகள் போன்ற விஷ வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு விண்வெளியில் ஓடிப்போய் காற்று மண்டலத்தில் கலக்கும். இது ஒரு போர்வை போல் பூமியை சுற்றி மூடிக்கொண்டு மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருக்கிறது . பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது . மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்கு தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. நாம் மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதால் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில்அதிகரித்துக்கொண்டிருக்கிறது .

மரங்களின் அவசியம்!

தற்போது உலகை உலுக்கிவரும் பிரச்சினைகளில் ..சுற்றுப்புற சூழல் மாசடைதல் என்பது மிக முக்கியமானது , இதன் காரணமாகவே பூமி வெப்பமடைகிறது . இதற்கு நிரந்தரத்தீர்வாக ; நெடுங்காலத்தீர்வாக மரங்கள் நடவேண்டும் என்பதை, அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம் . இருக்கின்ற மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக,, வெட்டிச்சாய்த்து வருகிறோம்..ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எடுக்கும் முயற்சி மிக அசாதாரணமானது !!!

நம்முடைய வீட்டை சுற்றி மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், ஏர்கண்டிஷன் பயன்பாடு மிகவும் குறையும்.மின்கட்டணம் மிச்சமாகும்.குளுமையான வேப்பமரத்துக்காற்று யாருக்குத்தான் பிடிக்காது!!. மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும்,கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்வதன் மூலமும் , சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.
மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும்,நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.

புவி வெப்ப அளவு உயர்வால் ஏற்படும் விளைவுகள்

புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது .
இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத்தாக்குதலுக்குள்ளாகி மடிவதைக் காண்கிறோம் .
காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓஸோன் செறிவு அதிகரிக்கச்செய்கிறது. இது சுவாச பாதிப்பையும் நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோயை மேலும் தீவிரமடைய செய்கின்றது .
அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும் அதிக வெப்பமும் விவசாயத்தை பாதிக்கிறது. அதற்கு போட்டியாக மனிதனே விவசாய நிலங்களை காங்கிரீட் போட்டு மூடி விடுகிறான்.
இந்த பூமியின் மேற்பரப்பு எங்கும் ஏற்படும் வெப்ப உயர்வால் நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படும்.
பாலங்கள், ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும்

.கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் இப்படிப்பட்ட பெரும் நகரங்கள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது
வான் மழை பொய்க்கும். துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப் பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும். அப்படி ஒரு அபாயம் இப்போது நம் தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறது.
.
இன்றைய தலைமுறையினரின் கடமை
.

இன்றைய தலைமுறை இப்போது கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு வருகிறது என்றே சொல்லவேண்டும். செடிகொடிகள் வளர்ப்பதிலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவேண்டும் என்று முயற்சிப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.தற்போது வளர்ந்து இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் நம்மைவிட இன்றைய தலைமுறையினர் துடிப்புடன் இருக்கிறார்கள்.


மலைப்பிரதேசங்களில், மரங்களை வெட்டிச்சாய்த்து அடுக்கு மாடி குடியிருப்புகள்,உல்லாச குடியிருப்பு போன்றவற்றை கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது.இது கண்டிப்பாய் தடுக்கப்பட வேண்டும் .சென்ற மழையின் போது, ஊட்டியில் நடந்த நிலச்சரிவு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான பிரதேசங்கள் இப்போது வெப்பமடைந்து வருகின்றன. ஊருக்கே ஏசி போட்டமாதிரி இருந்த இடங்களில் இப்போது ஏசி வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன விஷயம்... ஏசி, ஃப்ரிட்ஜ் போன்றவை, குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் நச்சு வாயு, சுற்றுப்புற சூழலை வெப்பமடையச்செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்ற சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உறைகளால் நிகழும் சுற்றுப்புற சீர்கேட்டையும் இளையோர்கள் கண்டிப்பாய் தடுத்திடல் வேண்டும் .
.
மழை நீர் சேமிப்பு!

தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆனால் இந்த மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் ஏரிகள் இன்று தூர்ந்து போய்விட்டன. அல்லது வீட்டுமனைகளாகவும், போக்குவரத்துப் பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன.
ஏரிகளுக்கு மழை நீரை கொண்டு வரும் வாய்க்கால்கள் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பதால் ஏரிகள் நிரம்புவதில்லை.இதனால் விலைமதிப்பற்ற மழை நீர் வீணாகிறது .
மழை நீர் கடலில் சேர்ந்தால் யாருக்கு நன்மை? அதை மண்ணுக்குள் சேர்த்தால் நம் அனைவருக்கும் நன்மை. இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து வேளாண் உற்பத்தி பெருகும். நம் குடிநீர் பஞ்சமும் தீரும்!
மழை நீர் சேமிப்பால் கீழ்க்காணும் நன்மைகள் ஏற்படுகின்றன .
1. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

2. நீர் பற்றாகுறை குறைகிறது.

3. நீரின் கார அமில (pH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.

4. விவசாய நிலங்களில் மண்அரிப்பைதடுக்கிறது.

5. நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது

6. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது.

7. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன

8. நகர் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது.

9. நகர் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.

சென்னை மாநகரில், 1,800 சதுர அடி கட்டட மேற்பரப்பு (அல்லது மொட்டைமாடி) உள்ள வீட்டில் மழைநீர்த் தொட்டியைப் பெரியதாகத் தரைக்குக் கீழே அமைக்க முடிந்தால், தற்போது பெய்யும் மழையளவுப்படி 58 நாளில் 1,00,800 லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடியும். இந்த நீர் தூய்மையானது. 6 நபர்கள் உள்ள ஒரு குடும்பம், இந்த நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். தற்போது சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 2 லிட்டர் நீரின் விலை குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து ரூபாய். அப்படியானால் இந்த மழை நீரில் பாதியைச் சேமிக்க முடிந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் பல லட்சம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும்.

பசுமை இல்லா பூமி பாலைவனம் தான்!
.
மழை பெய்யவில்லை, ஆகவே விவசாயம் செய்ய முடியவில்லை என்றஅங்கலாய்ப்பையும் நிறையவே கேட்டு வருகிறோம். இதற்கு காரணம் நாம்தான். மரங்கள் வெட்டப்பட்டு விளை நிலங்களெல்லாம் ப்ளாட் போடப்பட்டு,வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திடீர் நகர்கள் பல இரவோடு இரவாக முளைத்து வருகின்றன. நீர்வளம் மிகுந்த இடங்களில் கூட இது பரவிவருவது பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டால்,உணவுக்கு... வீடுகளின் மொட்டைமாடிகளில் காய்கறி செடிகள், பூஞ்செடிகளை பயிரிடவேண்டிய நிலை ஏற்படும்.
நம்முடைய சந்ததியினருக்கு எத்தகைய உலகத்தை நாம் விட்டுச்செல்லப்போகிறோம்?..எல்லா இயற்கை செல்வங்களையும் சுரண்டியபின்னர், அவர்களுக்கென்று என்ன மீதம் விட்டு வைக்கப்போகிறோம்?..பசுமையை பறிகொடுத்து விட்டு பாலைவனமாய் நிற்கும் பூமியை தான் மீதம் வைக்க முடியும் !

மரம் நமக்கு என்ன தருகிறது?

மலர்கள், காய், கனிகள் தருகிறது
நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
காற்றை சுத்தப்படுத்துகிறது
நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும். அந்த பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது
ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.

மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்" என்கிறது குறள் .

"பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம்; அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பாகும்" என்று மரத்திற்கு பெருமை சேர்க்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்!
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கில் முதலிடமும், புங்க மரம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றலும் காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும், அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும்உள்ளடக்கிய மரமான வேம்பு,

தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும் நெல்லி,

உடலுக்கு முறுக்கு தந்திடும் முருங்கை,


காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளித்து , விஷத்தைமுறித்து, வாய் புண்ணை ஆற்றும்எலுமிச்சை,

தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். சிந்திய அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது.இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரமான கடுக்காய்,

நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களை .குணப்படுத்தி - சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படும் வில்வம் ,

கண் பார்வைக்கோளாறுகளுக்கும் , எலும்புகள் பலமடையவும் , புண்கள் விரைவில் ஆறவும் உதவும் கருவேப்பிலை,

குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி,

தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழத்தினை தரும் நாவல் ,

இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கும் அத்தி,

பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படும் ஆலமரம்,

.உடலில் இருக்கும் தேவையற்ற ரசாயன நஞ்சை நீக்கும் நல்ல மருந்து அகத்தி,

மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டதும் . . 18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றுள்ள மரமான அவுரி,
என்று எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டு மனித சமுதாயம் நோயற்று வாழ்வதற்கு ஒருதாயைப்போல ஏராளமான மரங்கள் உதவுகின்றன. .

மரங்கள், காய்களாகவும், கனிகளாகவும், கீரை வகைகள் என்றும் மனிதனுக்கு பலவழிகளில் உணவைத் தருகின்றன. இவைகள் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடையாக விளங்குகின்றன! . மரங்கள் மட்டுமே உலகில் சுயமான-சுவைமிகுந்த உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம்.அந்த நேரத்தை பயனுள்ளதாக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

மரங்களே மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரங்களை பேணுவோம்! மனிதராய் மாறுவோம்!

அஸ்ஸாம் மாநிலத்தின் போகைகாம் மாவட்டம். "சவுட்டகி" என்ற வறண்ட கிராமம்!.விவசாயம் ஏதுமின்றி வறுமையில் வாடும் மக்கள்! காட்டு மரங்களை வெட்டி விற்று பிழைப்பவர்கள்! ஆனால் அங்கே அரசின் தரிசு நிலங்கள் ஏராளம். புதிதாய் மாறுதலாகி வந்தார் மணிவண்ணன் என்ற மாவட்ட ஆட்சித்தலைவர். கிராம மக்களுடன் பேசினார். "பழ மரக்கன்றுகளை அரசு தரும் ! அதை நடுவதற்க்கான கூலியையும் அரசே தரும்! நீங்கள் ஐந்து ஆண்டுகள் இக்கன்றுகளை வளர்த்து பராமரித்தால் அதன் பழங்களை விற்று வரும் லாபம் அனைத்தும் உங்களுக்கே! " என்றார். கிராம மக்கள் அனைவரும் சம்மதிக்க ஒரே நாளில் 284236 கன்றுகள் நடப்பட்டு, அக்கிராம மக்களின்வாழ்க்கை தரம் உயர்ந்திட அஸ்திவாரம் போடப்பட்டு ,விரைவில் பழ மரங்கள் பலன் தர இருக்கிறது!
மரங்களை வெட்டி பிழைப்பதைவிட, மரங்களை நட்டு வைத்து அவைகள் தரும் பயனை வைத்து வாழ்க்கை நடத்துவதுஅதிக நன்மை என்று புரிந்து கொண்ட அஸ்ஸாம் மாநில மக்களை முன்னுதாரணமாய் கொண்டு ஒவ்வொரு இந்தியனும் பசுமையை போற்றிட வேண்டும்!
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இயற்கை நமக்கு கொடையாக வழங்கியுள்ள மரம் செடிகளை நிறைய வளர்க்க வேண்டும். மரம் செடிகள் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தாவரங்களின் சேவை நமக்கு தேவைப்படுகிறது. நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடோ இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம். ராமர் இலங்கைக்கு பாலம் கட்டும்பொழுது அணிலின் பங்கு எந்தஅளவுக்கு இருந்ததோ, அதே போல் சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு பங்காற்றிட உறுதி கொள்வோம்!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வளம் அடைவோம்!