வியாழன், 19 ஜனவரி, 2012

இப்படியும் ஒரு மாமனிதர்!



இப்படியும் ஒரு மாமனிதர்!


தினந்தோறும் நள்ளிரவு இரண்டு மணியாகிறது அவர் உறங்கச் செல்வதற்கு!

அது வரையில் மலை போல குவிந்து கிடக்கும் கோப்புகளை ஒவ்வொன்றாக பார்வையிடுகிறார். கையெழுத்திடுகிறார்.

எந்த ஒரு கோப்பும் தன் பார்வைக்கு வந்து விட்டே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் நடைபயிற்சி, யோகா என்று சுறுசுறுப்பாக ஆரம்பித்து விடுகிறார்.

”எப்பவாச்சும் அவரு தூங்குவாருங்களா?” – கேட்கிறார்கள் ஆட்சியர் அலுவலக கடைநிலை ஊழியர்கள்.

அவர் தான் மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், ஐ.ஏ.எஸ்.

’லஞ்சம் தவிர்த்து – நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகம் அவரது அலுவலகம் முழுவதும் பளிச்சிடுகிறது.

நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது இந்திய ஆட்சிப் பணி வரலாற்றிலேயே முதல் முறையாக தனது சொத்துக் கணக்கை மாவட்ட இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிட்டு சக அதிகாரிகளின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர். “இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?”

“கிராம நிர்வாக அதிகாரிகள் அவரவர் வேலை பார்க்கும் கிராமத்தில் தான் தங்கியிருக்க வேண்டும்” என்ற அடிப்படை விஷயத்தை அழுத்தம்திருத்தமாகச் சொல்லியவர். அதனால் அவர்களின் கோபப்பார்வைக்கும், ஏச்சுபேச்சுக்கும் ஆளாகினார்.

கலெக்டர் அலுவலக வாசலிலேயே கூட்டம் போட்டு தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டும் அளவுக்கு கிராம நிர்வாக அலுவலகர்களை தூண்டி விட்டார்கள் அவரால் பாதிக்கப்பட்ட அரசியல்வா(ந்)திகள்.

’மசூரி’யில் இரண்டு மாத கால பயிற்சிக்கு சென்று வாருங்கள் என்று 2,000 கிலோ மீட்டருக்கு அப்பால் அனுப்பி விட்டு நைஸாக இங்கே நாமக்கல் ஆட்சியர் பதவியிலிருந்து தூக்கினார்கள். அடுத்து எங்கும் பணி ஒதுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தார்கள். சில மாதங்கள் கழித்து உப்புச்சப்பில்லாத பணி ஒன்று பேருக்கு ஒதுக்கப்பட்டது. அதிலும் சென்று தன் ‘வேலைகளை’ காட்ட ஆரம்பித்த போது தான் சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்தது.

இவரது பணி நேர்மையைப் பார்த்த தேர்தல் ஆணையம் இவரை மதுரை ஆட்சியராக பணி மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு நட்ந்ததெல்லாம் நாடறியும்.

‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற பெயரில் ‘தேர்தலில் வெற்றி பெறும் வழிக்காக’ அப்போதைய ஆளுங்கட்சி ஒரு வழிமுறைய உண்டு செய்து அதன் மூலம் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த நேரம். அதே திருமங்கலம் உள்ளடக்கிய மதுரையில் நேர்மையான தேர்தல் நடந்தேற வைத்தார் சகாயம்.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசும் மதுரையிலேயே ஆட்சியராக தொடரச் செய்துள்ளது.

ஆனந்த விகடனின் 2011 டாப் 10 மனிதர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார் சகாயம். போன வருடத்திய டாப் 25 பரபரப்புகளில் முதலாவதாக அழகிரியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விகடன் அதிலும் இவரது அதிரடியைப் பாராட்டியுள்ளது. ‘மக்கள் சேவகர்’ என்ற பட்டத்தை சகாயத்துக்கு வழங்கியுள்ள விகடன், தனது வாசகர் மேடை பகுதியில் சகாயத்திடம் வாசகர்களை கேள்வி கேட்கச் செய்து பதிலை வரும் வாரங்களில் வெளியிடவிருக்கிறது.

சுதந்திரத்திற்காகப் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாரிசுகள் வறுமையில் வாடுவதைக் கேள்விப்படும் சகாயம், அவர்களை அழைத்து மதுரையில் உள்ள ‘உழவன் உணவகம்’ என்ற இயற்கை உணவுச் சாலையில் (இதுவும் இவர் அமைத்தது தான்) ஒரு உணவகம் அமைக்க தகுந்த ஏற்பாடுகளையும், பயிற்சியையும் வழங்கச் செய்திருக்கிறார். இப்போது அவர்கள் அங்கே வெகு மகிழ்ச்சியாக தினமும் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதே உழவன் உணவகத்தில் இன்னமும் ஒரு சில சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் இதே போல உணவகம் அமைக்க உதவியுள்ளார்.

இது குறித்த செய்தி அண்மையில் நாளேடுகளில் வந்ததற்கும் மறுநாள் காலை 7.30 மணியளவில் ஆட்சியர் இல்லத்துக்கு சுமார் 84 வயதுள்ள பெரியவர் ஒருவர், “நானும் கப்பலோட்டிய தமிழரின் வாரிசு. ஆட்சியரைப் பார்க்க வேண்டும்” என்கிறார். உடனடியாக அவரை உள்ளே அழைக்கிறார் ஆட்சியர். உள்ளே நுழைந்து ரோஜாப்பூ மாலையும், பொன்னாடையும் போர்த்தி வாழ்த்தி வணங்குகிறார் சிதம்பரம் என்ற அந்தப் பெரியவர். “வ.உ.சி.யின் வாரிசுகளுக்கு உண்மையிலேயே நீங்கள் செய்திருக்கும் உதவிக்காக நாங்கள் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்” என்கிறார்.

“நான் அவருடைய மனைவி வழி உறவினர். நாளிதழில் நீங்கள் அவருடைய மகன் வழி வாரிசுகளுக்கு உதவியிருப்பதை நேற்று நள்ளிரவு தான் படித்தேன். உடனடியாக நன்றி சொல்வதற்காக ஓடோடி வந்தேன்” என்று உணர்ச்சிவசப்படுகிறார் அந்தப் பெரியவர். “மீனாட்சியம்மன் அருளில் நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். ஆனால் வ.உ.சி.யின் வாரிசுகள் சிலர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு முன் பல ஆட்சியர்களைச் சந்தித்தும் பார்ப்பதற்கு கூட அனுமதிக்காத நிலையில் நீங்கள் செய்திருக்கும் இந்த உதவி நிச்சயம் பாராட்டத்தக்கது” என்று கூறிவிட்டுக் கிளம்புகிறார் பெரியவர்.

கப்பலோட்டிய தமிழரின் வாரிசு என்பதால் இப்போது செய்யப்பட்டுள்ள உதவி வெளியில் தெரிந்திருக்கிறது. இப்படி இல்லாமல் எத்தனையோ பேருக்கு தன்னால் முடிந்த தனது ஆளுமைக்குட்பட்ட நேர்மையான உதவிகள் அனைத்தையும் தினந்தோறும் செய்து கொண்டு தான் இருக்கின்றார் சகாயம்.

திடீர் திடீரென பள்ளிக்கூடங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் ஆய்வுக்குச் செல்கிறார். பள்ளிக்கூடங்களில் சத்துணவு போடுவது வருடத்திற்கு 200 நாட்கள் தான் போடுகிறார்களாம். அப்படி ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்ற போது அங்கிருந்த மாணவிகள் தேர்வு சமயங்களில் தங்களுக்கு சத்துணவு போடப்படுவதில்லை என்று சொன்னதும் உடனடியாக தேர்வு சமயங்களிலும் அவர்களுக்கு சத்துணவு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். “தேர்வு சமயத்தில் பசியோடும், பட்டினியோடும் இருக்கச் செய்தால் அவர்கள் எப்படி ஒழுங்காக தேர்வு எழுத முடியும்?” என்று கேட்கிறார். நியாயம் தானே! சொல்லப் போனால் விடுமுறை தினங்களில் கூட சத்துணவு வழங்க அரசு வழி வகை செய்ய வேண்டும்.

பேருந்து நிலையக் கடைகளில் ‘பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீர்கள்” என்று அறிவுறுத்துகிறார். அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்து கை குலுக்கும் இளைஞர்கள், குழந்தைகள், முதியோர்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கிறார். தேவைப்படும் இடங்களில் அறிவுரை வழங்குகிறார்.

பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தன்னுடைய மொபைல் நம்பரை வெளியிட்டிருந்தார். இப்போது எல்லாம், “ஐயா, கேஸ் கம்பெனியிலே ஃபோன் அடிச்சா எடுக்கவே மாட்டேங்கிறாங்க” என்பது போன்ற புகார்கள் எல்லாம் இவரை அழைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் கோபப்படாமல் தனது உதவியாளர்களிடம் ஃபோனைக் கொடுத்து, “இது என்னான்னு கேட்டு பிரச்னையை தீர்க்கப் பாருங்க” என்கிறார்.

“எது எதையெல்லாம் ஒரு ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் பாருங்கள். எனக்கிருக்கும் வேலைப் பளுவில் இதிலெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனாலும் இவருகிட்ட கொண்டு போனா பிரச்னை தீர்ந்திடும்ன்னு நினைக்கிறாங்க போல. அதான் எதுவா இருந்தாலும் ஃபோன் அடிச்சிடுறாங்க” என்கிறார் சிரித்தபடி!

சுமார் முப்பதாயிரம் வங்கிக் கணக்கில் இருக்கிறது சேமிப்பு. கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபாயில் எல்.ஐ.சி. கடனுதவியில் வாங்கிய வீடு ஒன்று மதுரையில் இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சியரின் இன்றைய பொருளாதார நிலை இது தான் என்றால் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அதான் உண்மை.

”சில ஆண்டுகளுக்கு முன் என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. என் மனைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ "உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் மனைவியோ "லஞ்சப் பணத்தில்தான் என் குழந்தையைப் பிழைக்க வைக்கனும்னு அவசியமில்லை'ன்னு சொன்னாங்க. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப,எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டு வந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு! நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா… அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' – தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம். இதான் சகாயம்.

நேர்மை எனும் வேள்வித்தீயில் தினந்தோறும் உழன்று தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்ய வேண்டும் என்று துடிப்போடு செயல்படும் சகாயம் போன்ற அதிகாரிகள் இன்றைய தேதியில் ஒரு சிலராவது இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது.

நிரம்பிய தமிழ் பற்றாளர். பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்யச் செல்லும் போதெல்லாம், “தமிழிலேயே கையெழுத்திடுங்களேன்” என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இவர் இத்தனை நேர்மையாக இருப்பதற்கு இவரது குடும்பத்தினரும் காரணம். புரிந்துணர்வு கொண்ட மனைவி விமலா. மகனின் பெயர் ‘அருள் திலீபன்’. மகளின் பெயர் ‘யாழ்’.

“புதுக்கோட்டை அருகில் பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்தவன் நான். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எனக்கு வலியுறுத்தியவர் என் அம்மா. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே… ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ… கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன். தினமும் ஒரு 10 பேராவது எங்கள் வீட்டில் பசியாறுவார்கள். அதை ஏன் நூறு பேர், ஆயிரம் பேர் என உணவருந்தச் செய்யக்கூடாது என்று சிறு வயதிலேயே ஏங்குவேன் நான். இப்போது கூட என்னுடைய லட்சியம் கிராமப்புற ஏழைகளுக்காக அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை அமைப்பது தான்” என்கிறார் அவர். “நான் வேலைக்கு போய் சம்பாதித்து பணம் கொண்டு வருகிறேன். அதை வைத்து ஆஸ்பத்திரி கட்டலாம்” என்கிறார் ஒன்பதாவது படிக்கும் அவரது மகன் ‘அருள் திலீபன்’.

”காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்ஸியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. ’சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது” – பெப்ஸி சம்பவம் குறித்து கேட்டதும் சொல்கிறார்.

ஒரு பிரபல பதிப்பகம் சமீபத்தில் ஒரு எழுத்தாளரைக் கொண்டு இவர் குறித்து ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதி வெளியிடும் ஏற்பாடுகளைச் செய்தது. விஷயம் கேள்விப்பட்ட சகாயம், “அட, நான் என் கடமையைத் தான் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதெல்லாம் வேண்டாம்” என்று அன்போடு மறுத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உண்மையான நடந்த சம்பவங்களுடன் கூடவே, மக்கள் இவரைப் பற்றி இப்படி பேசிக் கொள்கிறார்கள், இப்படி சம்வங்கள் நிகழ்ந்ததாம் என்கிற ரீதியில் சில நடக்காத சம்பவங்கள் இடம் பெற்றிருந்ததாம். “எல்லாமே அவரை ஆஹா, ஓஹோன்னு பாராட்டும் படியான சம்பவங்கள் தான். ஆனாலும் அப்படியெல்லாம் நடக்காத சம்பவங்களை வரலாற்றில் பதிய வேண்டாமே”ன்னு மறுத்திட்டாருங்க” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
இப்படி எத்தனையோ அதிரடி ஆக்‌ஷன் சம்பவங்கள். உணர்ச்சி வசப்பட வைக்கும் உதவிகள்…

தொடுவானம் (www.thoduvanam.com) திட்டம் மூலம் கிராமப்புற மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம். ‘உழவன் உணவகம்’ என்ற இயற்கை உணவகச் சாலை. மாதிரி கிராமம் என்ற திட்டத்தின் மூலம் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல். ஊனமுற்றவர்களுக்கு ஊன்று கோல் வழங்கும் திட்டம். இலங்கை ஏதிலியர்களுக்கு அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் விதமாக ஆடை உருவாக்கும் கூடம், BPO.. இப்படி பல திட்டங்கள் தீட்டி மதுரை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக்க உளப்பூர்வமாக செயல்படுகிறார்.

சமீபத்தில் நடந்த தமிழக மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் சிறப்பான சேவைக்காக மாண்புமிகு தமிழக முதல்வரின் மூன்றாவது பரிசினை பெற்றுள்ளார், மக்கள் மனதில் முதலிடம் பெற்றுள்ள ‘மக்கள் சேவகர்’ சகாயம்.

கட்டுரை ; மாயவரத்தான்.
தமிழோவியம் இணைய இதழ்.http://www.tamiloviam.com/site/?p=2186#respond

கருத்துகள் இல்லை: