கண்ணதாசன் !
இந்தப்பெயரை ஒலிக்கும்
உதடுகளே
கவிதைகள் ஆகிவிடும்.
கொஞ்ச நாட்களே ஆண்டாலும்
உனது கவி ஆளுமையால்
திரையுலகம் நிமிர்ந்து நின்றது !
உனது வரிகளை உச்சரித்து
பாடகர்கள் உயர்ந்து நின்றார்கள்!
மெட்டமைத்த இசைவாணர்
தொட்டு நின்றார் சிகரங்களை !
சிற்றின்பவாசல்களை தேடி ,பிறகு
ஆன்மிக உலகில் அமர்ந்து விட்ட கவியரசன் நீ!
கவிதையின்
காட்டாறுகளையெல்லாம்
தடம்புரட்டிக்கொண்டு வந்து
அழகு காதல் உணர்ச்சி எனும்
தேனாறுகளையெல்லாம்
குடித்து தீர்த்துவிட்டு
காலிக்கிண்ணத்தை
அதாவது இந்த உலகத்தை
வீசியெறிந்து விட்டுப்
போய்விட்டாய் !
அந்தக் கிண்ணத்தை மொய்த்த
எறும்புக்கூட்டங்களே
இன்று வரை
கவிஞர்கள் என்று
ஊர்ந்து கொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக