சனி, 26 நவம்பர், 2011

வீரம் தோற்பதில்லை!


வவுனியாக்காடுகளில் வாழ்ந்தாயோ ...இல்லை
வஞ்சகரின் வலைதனில் சிக்கி வீழ்ந்தாயோ !
விடை தெரியா கேள்வியது!
படை நடுங்க செய்தவனே!
பகலவன் போல் ஒளி வீசி
எம் நெஞ்சில் வாழ்கின்றாய்!
நீ இருந்தாலும்..இறந்தாலும்...
வீரர்கள் தோற்பதில்லை..அவர்தம்
வீரமும் தோற்பதில்லை!

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

விதியின் குற்றமா?



விபத்துக்கு காரணம் விதியென்று சொல்வது
வெகுநாளாய் வாடிக்கை!
பணியில் அவசரமும்
பாதுகாப்பை மறப்பதுவும்
விபத்தை தருமேயன்றி
விதியின் குற்றமன்று!

நீர் வற்றி போனதற்கு
ஆறுதான் குற்றமென்று
அவதூறாய் சொல்வதுபோல்
விதியால் தான் விபத்து என்று
விளம்புவது குற்றமன்றோ?
மண்ணுக்குள் கனிமம் தேடும் சுரங்கப்பணி
எண்ணிலடங்கா ஆபத்துக்கள் நிறைந்தபணி!
காப்பு விதி ஆயுதத்தை கையில் கொண்டு
போக்கிடலாம் விபத்தைஎல்லாம் நொடியில் கண்டு!

தலைகாக்க தலை கவசம்!
கால்களுக்கு காலணிகள் !
கண்களை காத்திடும் கண்ணாடி!
கூலி வாங்கா சேவகராய் -உன்
கூடவே இருந்துவரும் விரல் காக்கும் கையுறைகள் !
நித்தமும் இவை அணிந்து சுரங்கப்பணி தொடர்ந்திடவே
அக்கணமே விபத்து எல்லாம் காணமல் ஓடிவிடும்!

சுரங்கத்தில்
தெரியாத வேலையை
தெரிந்தது போல் செய்வார் எல்லாம்
ஆலையில் சிக்கிய கரும்பென
அவதியுறுவார் நிச்சயம்!
அதிகாரியின் அறிவுரையால் அவ்வேலை
முடிப்போருக்கு ஆபத்தில்லை நிச்சயம்!

எந்திரங்கள் தவறு செய்து எடுப்பதில்லை உன் உயிரை!
நீ செய்யும் சிறு தவறே எடுத்து விடும் உன் உயிரை!
சிறுதுளி பெருவெள்ளம் ஆவதுபோல்
சிறுதவறு பெருநட்டம் தந்துவிடும்!

காதல் மனைவியையும்,
கண்ணான குழந்தைகளையும்,
கணப்பொழுது நினைத்தாலே -பணியில்
கவனம் கூடிடுமே!
விபத்துக்கள் விலகி ஓடிடுமே!

யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும்
உன்னை யோசிக்க வைக்கும்!
யோசித்து நீ செய்யும் ஒவ்வொரு செயலும்
பிறரை யோசிக்க வைக்கும்!
தெளிவாய் சிந்தித்து பணி தொடங்கு சுரங்கத்தில் !
தேடி வரும் வெற்றிமாலை அரங்கத்தில்!
விதியை நம்பி வீழ்ந்து கிடக்காதே!
மதியை நம்பு மகுடங்கள் உனதாகும்!


புதன், 8 ஜூன், 2011

உண்ணாவிரதங்கள்!



உண்ணாவிரதங்கள்!

காவியும்,கதரும் ஓன்று சேர்ந்து

கருப்பு பணத்துக்கு கணக்கு கேட்கின்றன!

தெரிந்தோ தெரியாமலோ

இந்திய நாற்றங்கால்களில்

நெருப்பு விதைக்கப்பட்டு விட்டது!

கொஞ்சம் இறங்கி வந்து கூடிப்பேசி

நெருப்பை தணித்திடுங்கள்!

நீதியை நிலை நாட்டிடுங்கள்!

சனி, 19 மார்ச், 2011

மக்களின் ஆட்சி


வாக்காளனே !

உன் வாக்குகளுக்கு விலை கூறி

வாடிக்கையாளர்கள் வருவார்கள்!

வசமிழந்து விடாதே!

நீ

வாக்குகளுக்காய் வாங்கும் பணம்

உன் மனசாட்சிக்கும் சேர்த்துதான்!

உன்

மனசாட்சிக்கு விலை வைக்கும்

அரசியல்வாதிகள் நாளை

உன்னையே விற்றுவிடுவார்கள்!

நீ

வாக்களிக்கும்போது

உன்

ஆள்காட்டி விரலில் இடும் மையால்தான்

நாளை வரும் அரசுக்கு

அனுமதி கையொப்பம் இடுகிறாய்!

மனசாட்சி உன்னோடே இருக்கட்டும்!

மக்களின் ஆட்சி நன்றாய் மலரட்டும்!

சனி, 26 பிப்ரவரி, 2011

குறள் சிந்தனை!

குறள் சிந்தனை!

மூன்று தமிழ் அறிஞர்கள் சொல்லும் குரளுரைக்கு இது போட்டி இல்லை .என்
மனதில் தோன்றிய வித்தியாசமான சிந்தனை.....


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
:குறள்
கலைஞர் உரை:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மு.வ உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

எனது கருத்து :

எனக்கு அது வேண்டும் ! இது வேண்டும்! எவரிடமும் கை ஏந்தி நில்லாதவன்
இறைவன் .அந்த இறைவனின் திருவடியை சரணடைந்தால் எந்த துன்பமும் இல்லை!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

பிளாஸ்டிக் ஆபத்து.

பிளாஸ்டிக் ஆபத்து.

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயர்- 500-800 ஆண்டுகள்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது